கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரி மனு


கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரி மனு
x
தினத்தந்தி 27 April 2019 4:15 AM IST (Updated: 26 April 2019 9:44 PM IST)
t-max-icont-min-icon

கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரி மனு கொடுத்தார்.

ஈரோடு, 

கொடுமுடி கடை வீதி பகுதியை சேர்ந்த முத்து (வயது 40) என்பவர் தனது மனைவியுடன் வந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

நான் கொடுமுடி ரெயில் நிலையத்தில் கடலை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக கொடுமுடியை சேர்ந்த பெண் உள்பட 2 பேரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். வாங்கிய தொகைக்கு வட்டியும், அசலுமாக திருப்பி செலுத்தி விட்டேன். ஆனாலும் கடன் கொடுத்தவர்கள் கந்துவட்டி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சாலைப்புதூரில் இருந்து நான் கொடுமுடிக்கு வந்து கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு கடன் கொடுத்தவர்கள் என்னை வழிமறித்து அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பணம் கேட்டு என்னை அடித்து உதைத்தனர் அவர்கள் என்னை குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்கள்.

மேலும் அவர்கள் என்னிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, கைரேகையும் பதிவு செய்து கொண்டனர். எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Next Story