அந்தியூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து; பணம் எரிந்து நாசம்
அந்தியூர் அருகே நடந்த தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பல் ஆனது. பணமும் நாசமானது.
அந்தியூர்,
அந்தியூரை அடுத்த ஒலகடம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 55). இவர் குடிசை வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். ராமரும், அவருடைய மனைவியும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்கள். சிறிது நேரத்தில் அவர்களது வீட்டில் இருந்து புகை வந்தது. பின்னர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து குடிசையில் மீது ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
மேலும் இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். தகவல் அறிந்து ராமரும், அவருடைய மனைவியும் வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து குடிசை மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் குடிசையில் இருந்த ரூ.5 ஆயிரம், கட்டில், பீரோ, ஆடைகள் உள்ளிட்டவை எரிந்து நாசம் ஆனது. குடிசை முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. யாரோ மர்மநபர்கள் பீடியை புகைத்துவிட்டு குடிசை மீது போட்டதே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமர் வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story