பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நீட்டிப்பு


பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நீட்டிப்பு
x
தினத்தந்தி 26 April 2019 10:00 PM GMT (Updated: 26 April 2019 4:24 PM GMT)

பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புஞ்சைபுளியம்பட்டி, 

மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. இதனால் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிக்கு 2-ம் போக பாசனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து 52 அடியாக ஆனது. இதனால் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது.

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனப்பகுதி விவசாயிகள் தண்ணீர் திறப்பை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு நேற்று முன்தினம் இரவு முதல் 29-ந் தேதி இரவு வரை 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை குடிநீர் தேவைக்கு மட்டும் 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவு வரப்பெற்றதையடுத்து நேற்று முன்தினம் மாலை தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி வீதம் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.93 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 117 கன அடியாகவும் இருந்தது. மேலும் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றிற்கு 900 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

Next Story