குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் மேலும் ஒரு நர்சு, ஆம்புலன்ஸ் டிரைவர் கைது போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒரு நர்சு, ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் தட்டான்குட்டை, காட்டூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதவள்ளி (50). இவர் செவிலியர் உதவியாளராக(நர்சாக) ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி, கடந்த 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். அதன் பிறகு இவர், குழந்தைகளை சட்ட விரோதமாக வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமுதவள்ளி, தர்மபுரியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரிடம் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. அந்த ஆடியோவில் அமுதவள்ளி, நான் 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறேன். பெண் குழந்தையாக இருந்தால் ரூ.2½ லட்சம் முதல் ரூ.3½ லட்சம் வரையிலும், ஆண் குழந்தையாக இருந்தால் ரூ.4 லட்சம் முதல் ரூ.4½ லட்சம் வரையிலும் விற்று வருகிறேன். இதனை வெளியில் கூற வேண்டாம். பிறப்பு சான்றிதழ் வேண்டுமானால் ராசிபுரம் நகராட்சியில் இருந்து வாங்கி தருகிறேன். அதற்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறியுள்ளார்.
இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வெளியானதை தொடர்ந்து, கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மேற்பார்வையில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். குழந்தை விற்பனை செய்வதில் அமுதவள்ளியுடன் யார்? யார்? தொடர்பு வைத்து உள்ளனர்? என்பதை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் அமுதவள்ளியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொல்லிமலையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் என்பவரிடம் 2 குழந்தைகளை வாங்கி ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீனிடம் விற்றது தெரிந்தது. அதேபோல் சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினரிடம் ஒரு குழந்தையை வாங்கி மேட்டூரில் ஒருவரிடம் விற்றதும் தெரியவந்தது. இதையொட்டி ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசனையும், நர்சு பர்வீனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார், முருகேசனிடம் நடத்திய விசாரணையில் 6 குழந்தைகளை அமுதவள்ளியிடம் விற்றதாக தெரிவித்தார். நர்சு பர்வீன் அமுதவள்ளியிடம் 4 குழந்தைகளை வாங்கியதாக தெரிவித்தார். அமுதவள்ளி வாங்கிய குழந்தைகளை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் விற்பனை செய்ததாக அவர்கள் கூறினர். ஆனால் குழந்தைகளை யாரிடம் விற்றார்? என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு நேற்று 2-வது நாளாக ராசிபுரத்தில் முகாமிட்டு அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.
மேலும் கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடக்கும் பிரசவங்கள் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் அவ்வப்போது அமுதவள்ளிக்கு தகவல் கொடுத்து வந்ததாகவும் அதன்பேரில் அமுதவள்ளி குழந்தைகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் நாமக்கல் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் உத்தரவின் பேரில், ஒரு மருத்துவ அலுவலர், ஒரு வட்டார சுகாதார மேற்பார்வையாளர், 2 சுகாதார ஆய்வாளர்கள், 1 வட்டார புள்ளியியல் அலுவலர் உள்பட 15 பேர் அடங்கிய குழுவினர் ராசிபுரத்தில் உள்ள 8 தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்று விவரங்களை களஆய்வு செய்தனர்.
ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2017-ம் ஆண்டு பிறந்த 980 குழந்தைகளின் பிறப்பு சான்றுகளை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் 2 ஆண்டு சான்றிதழும் ஆய்வு செய்யப்படுகிறது. ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 4,800 குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதில் ஏதேனும் முறைகேடு நடந்து உள்ளதா? என்பது பற்றியும் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் கைதான அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளதால் இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது.
Related Tags :
Next Story