கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவு
அரியலூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர்,
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து புயலாகவும் மாறி வருகிற 30-ந் தேதி தமிழக கடலோர பகுதிகளில் கரையை கடக்க இருக்கிறது. உருவாக இருக்கும் இந்த புதிய புயலுக்கு “பானி”என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் சார்பில் கனமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் கனமழையின் போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 29 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் உதவி கலெக்டர் தலைமையில் பல்துறை அலுவலர்களை கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து, அந்த மையத்தில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு, பொது வினியோக திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மேலும், மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான மருந்துகள், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும் மீட்பு உபகரணங்களான பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட் போன்ற உபகரணங்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்திட வேண்டும். குறிப்பாக மின்சார வாரியம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் வயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்திட வேண்டும்.
மழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்திட வேண்டும். மேலும் பொதுமக்கள் அரியலூர் மாவட்டத்தின் வெப்ப அளவு, மழை அளவு குறித்து தெரிந்து கொள்ள தங்களது செல்போனில் TN SM-A-RT என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) விக்டோரியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story