பெரம்பலூரில் பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோவை வெளியிட்ட வக்கீலுக்கு கொலை மிரட்டல் பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு
பெரம்பலூரில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோவை வெளியிட்ட வக்கீலுக்கு, கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து அவர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
பெரம்பலூர்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு கும்பல் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வீடியோ எடுத்தும் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் வேலை வாய்ப்பு மற்றும் இதர பிரச்சினைகளுக்காக தங்களை தேடி வரும்போது ஆசைவார்த்தை கூறி, அவர்களை முக்கிய பிரமுகர்கள் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் கடந்த 21-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், எனக்கு கிடைத்த ஆதாரமான ஆடியோவை வெளியிடுவேன் என்று புகார்தாரரான வக்கீல் அருள் கூறியிருந்தார். அதன்படி நேற்று முன்தினம் வக்கீல் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மேற்கண்ட புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் 6 நிமிடம் 48 வினாடி பேசிய ஆடியோவினை நிருபர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்நிலையில் வக்கீல் அருள் நேற்று காலை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண், தன்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டதில் இருந்து, அந்த சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் தூண்டுதலின் பேரில், அரசு வக்கீல் மற்றும் சிலர் புகாரை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story