பொள்ளாச்சி விவகாரத்தில் கைதான 5 பேர் மீது கூடுதலாக பாலியல் பலாத்கார வழக்கு சேர்ப்பு - குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம்
பொள்ளாச்சி விவகாரத்தில் கைதான 5 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை,
பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (வயது 25), சதீஷ் (27), வசந்தகுமார் (24) ஆகியோரை கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி பொள்ளாச்சி போலீசார் கைது செய்தனர்.
அதன் பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த திருநாவுக்கரசும் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் பாதிக் கப்பட்ட 19 வயது மாணவி கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளியே வந்தது. அந்த மாணவி கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போலீசில் புகார் செய்தார். 26-ந் தேதி புகார் கொடுத்த மாணவியின் அண்ணன் பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதேப்பகுதியை சேர்ந்த மணிவண்ணன் உள்பட 5 பேர் அவரை தாக்கினார்கள்.
இது குறித்த புகாரின்பேரில் மணிவண்ணனை தவிர மற்ற 4 பேரும் கைதானார்கள். மணிவண்ணன் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். மணிவண்ணனுக்கு பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகித்தனர். எனவே அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தபோது, அவருக்கு பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை இந்த வழக்கில் போலீசார் சேர்த்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான 5 பேர் மீதும் பாலியல் தொல்லை கொடுத்தல், பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை ஆபாசமாக படம் எடுத்தல், ஆபாச படங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல், வழிப்பறி, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தல் என்ற வழக்குப் பிரிவு சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் மணிவண்ணனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, அவர் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை செல்போன் மூலம் வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் தெரிவித்தார். அது தொடர்பாக சில ஆதாரங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்தன.
இதைத்தொடர்ந்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் மீது கூடுதலாக இந்திய தண்டனை சட்டம் 376 (பாலியல் பலாத்காரம் செய்தல்) என்ற வழக்குப்பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேலும் சில ஆதாரங்களை சேகரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-
இந்த வழக்கில் கைதான 5 பேர் மீதும் ஏற்கனவே 5 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் மீதான குற்றம் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை கிடைக்கும். தற்போது எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் 5 பேர் மீதும் பலாத்காரம் செய்தல் என்ற வழக்குப்பிரிவை சேர்த்து உள்ளோம்.
இந்த வழக்கு கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையோ அல்லது 10 ஆண்டு சிறை தண்டனையோ கிடைக்கும். எனவே குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வாங்கிக்கொடுக்கும் வகையில் குற்றப் பத்திரிகையை தயார் செய்து வருகிறோம். மேலும் இந்த வழக்கில் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டும். அந்த ஆதாரங்களை ஓரிரு நாட்களில் கைப்பற்றி விடுவோம். அதிகபட்சமாக இன்னும் ஒரு மாதத்தில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story