‘பானி’ புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: விடுமுறையில் இருக்கும் அதிகாரிகள் பணிக்கு திரும்ப வேண்டும் நாராயணசாமி அறிவுறுத்தல்


‘பானி’ புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: விடுமுறையில் இருக்கும் அதிகாரிகள் பணிக்கு திரும்ப வேண்டும் நாராயணசாமி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 27 April 2019 4:30 AM IST (Updated: 27 April 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

‘பானி’ புயலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விடுமுறையில் இருக்கும் அதிகாரிகள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு பானி என்று பெயரிடப்பட்டுள்ளது. பானி புயல் வருகிற 30-ந்தேதி தமிழகம்-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை அதிக மழையும் பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வுமையம் புதுச்சேரிக்கு 30 மற்றும் 1-ந் தேதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் புதுவையில் புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக புதுவை தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள், இயக்குனர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘பானி’ புயல் கரையை கடக்கும்போது 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். புதுவையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது உச்சகட்ட புயல் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

புயல் தொடர்பாக ஏற்கனவே தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த புயலை எதிர்கொள்ள மாநில நிர்வாகம் தயார் நிலையில் இருக்கவேண்டும். அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளோம்.

‘பானி’ புயல் வரும்போது பெய்யும் மழையினால் பாதிக்கப்படாமல் இருக்க தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அவர்களுக்கு தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்.

மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்க தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்பு செய்யவேண்டும். புயல் அடிக்கும்போது மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து சேதம் ஏற்படுவதை தடுக்க மின்சாரத்தை நிறுத்தி வைப்பது, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறையினர் தண்ணீர் தேங்கவிடாமல் நடவடிக்கை எடுப்பது, விவசாய பயிர்கள் பாதிப்பு அடைந்தால் அவற்றுக்கு இன்சூரன்சு, அரசு மூலம் நிவாரணம் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

புயல் காலத்தில் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கவேண்டும். தற்போது விடுப்பில் இருக்கும் அதிகாரிகள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கஜா புயல் வந்தபோது காரைக்கால் கலெக்டர் கேசவன், துணை கலெக்டர் விக்ரந்த் ராஜா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு சேதங்களை தடுத்தார்கள். நமது அதிகாரிகளுக்கு நல்ல அனுபவம் உள்ளதால் புயல் சேதத்தை தடுப்பார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இந்த நிலையில் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘பானி’ புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

பொதுப்பணித்துறையினர் புதுவை முகத்துவாரம் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் தங்கள் துறைகளில் உள்ள வாகனங்கள், கருவிகள், எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளதா? என்பதை சோதனை செய்ய வேண்டும். பழுதடைந்து இருந்தால் அதனை சீர்செய்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் புதிய எந்திரங்கள் வாங்க வேண்டும். செயல்பாட்டில் உள்ள எந்திரங்களுக்கு தேவையான டீசலை வாங்கி கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும்.

புயலால் மரங்கள் சாய்ந்து விழுந்திருந்தால் அவற்றையும் அப்புறப்படுத்தவும், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால் அதனை சரி செய்து உடனடியாக மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலில் இருந்து புதுவையை பாதுகாக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story