சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் விடுதலை புதுவை கோர்ட்டு தீர்ப்பு
புதுச்சேரியில் சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேரை விடுதலை செய்து புதுவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி நகர பகுதியில் ஒரு வீட்டில் 3 சிறுமிகளை அடைத்து வைத்து ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தாக கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியகடை போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமிகளை அடைத்து பாலியல் தொழில் செய்வதற்கு போலீசார் உடந்தையாக இருந்ததும், போலீஸ் ஏட்டு முதல் இன்ஸ்பெக்டர் வரை சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதும், பலர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அனுஷா பாஷா, பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன், போலீஸ் ஏட்டுகள் குமாரவேலு, பண்டரிநாதன், போலீஸ்காரர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகிய 9 பேரும், புரோக்கர்களாக செயல்பட்ட புஷ்பா, ரகுமான், அருள்மரி உள்பட 18 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தவிர மற்ற 8 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில் 34 சாட்சிகளிடமும், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட 18 பேரையும் விடுதலை செய்து தலைமை நீதிபதி தனபால் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story