குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வில்லியனூர்,
வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழுதாவூர் சாலையில் பிள்ளையார் குப்பம் பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் கிராம மக்கள் நேற்று காலை 8 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story