ஓடும் லாரியில் டிரைவர் திடீர் சாவு
ஓடும் லாரியில் டிரைவர் திடீரென்று இறந்தார்.
கயத்தாறு,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சூரங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிராஜ். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 35). இவர் துலுக்கப்பட்டியில் உள்ள தனியார் சிமெண்டு நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் லாரியில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச் சென்று நெல்லையில் இறக்கினார். பின்னர் அவர் இரவில் அங்கிருந்து லாரியில் துலுக்கப்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
கங்கைகொண்டான் கலைஞர் காலனி பகுதியில் சென்றபோது, செந்தில்குமாருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் லாரியின் வேகத்தை குறைத்து இடப்பக்கமாக திருப்பியவாறு, லாரியின் ஸ்டீயரிங்கில் மயங்கி விழுந்தார். இதனால் சாலையோர பள்ளத்தில் லாரி பாய்ந்து நின்றது. சிறிதுநேரத்தில் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிட்டில் ஜெடியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாரடைப்பால் இறந்த செந்தில்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செந்தில்குமாருக்கு வினோதினி என்ற மனைவி உள்ளார்.
Related Tags :
Next Story