சுண்ணாம்புகுளம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை


சுண்ணாம்புகுளம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 April 2019 11:00 PM GMT (Updated: 26 April 2019 8:56 PM GMT)

சுண்ணாம்புகுளம் கிராமத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ளது சுண்ணாம்புகுளம் கிராமம். ஆரம்பாக்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இந்த கிராமத்தை சுற்றி மீனவ கிராமங்கள் உள்பட மொத்தம் 27 கிராமங்கள் உள்ளன. பழவேற்காடு ஏரிப்பகுதியையொட்டி உள்ள இந்த சுண்ணாம்புகுளம் பகுதிக்கு மேற்கண்ட 27 கிராம மக்கள் மட்டுமன்றி பலதரப்பட்ட அடையாளம் காணமுடியாத புதிய நபர்களும் தினமும் வந்து செல்கின்றனர். ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில் சுண்ணாம்புகுளம் கிராமம் அமைந்து உள்ளது.

இந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிறுத்தம் அருகே ஆரம்பாக்கம் போலீசாரால், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த புறக்காவல் நிலையத்தின் செயல்பாட்டால் சமூக விரோத செயல்கள் தடுக்கப்பட்டது மட்டுமன்றி அந்த பகுதி மக்களும், சுற்றி உள்ள கிராம மக்களும் நிம்மதியாக இருந்து வந்தனர்.

காய்கறி கடையாக...

பொதுமக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட மேற்கண்ட புறக்காவல் நிலையம் கடந்த 8 ஆண்டுகளாக இயங்கவில்லை. தற்போது காய்கறி கடையாக மாறி உள்ளது. சுனாமி ஒத்திகை மற்றும் அரசு விழாக்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் தற்காலிக புறக்காவல் நிலையம் செயல்படுகிறது.

நிரந்தர புறக்காவல் நிலையமாக அமைக்கப்பட்ட சுண்ணாம்புகுளம் புறக்காவல் நிலையத்தின் நிலைமை இப்படி ஆகிவிட்டதால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது நிம்மதியை இழந்து உள்ளனர். தினமும் மது குடித்துவிட்டு வரக்கூடியவர்களின் அத்துமீறல், தேவையில்லாத தகராறுகள், பழவேற்காடு ஏரியையொட்டி உள்ள கடல் மார்க்கத்தை போலீசாரால் முழுமையாக கண்காணிக்க முடியாத சூழ்நிலை என சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடிய பல்வேறு இடையூறுகள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எனவே இந்த பகுதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மீண்டும் முழுமையாக செயல்படும் வகையில் திறந்திட வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Next Story