முழுமையாக வறண்ட ஆரணி, கொசஸ்தலை ஆறுகள் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி


முழுமையாக வறண்ட ஆரணி, கொசஸ்தலை ஆறுகள் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 27 April 2019 4:45 AM IST (Updated: 27 April 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகள் முழுவதுமாக வறண்டதால் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

ஆரணி ஆறு ஆந்திராவில் உள்ள நகரியில் உற்பத்தியாகி பிச்சாட்டூர், சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, பழவேற்காடு வழியாக பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. அதேபோல் கொசஸ்தலை ஆறு பள்ளிபட்டு அருகே உற்பத்தியாகி பூண்டி வழியாக ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், தாமரைபாக்கம், அணைகட்டு பகுதிகள் வழியாக பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. ஆரணி ஆறு தமிழக எல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரும், கொசஸ்தலை ஆறு 55 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இந்த 2 ஆறுகளின் ஓரமாக 550-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த இரு ஆற்றங்கரை ஓரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலமாக மேல் நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

குடிநீர் பற்றாக்குறை

இந்த ஆறுகளை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. மழை பொய்த்து போனதாலும் கோடை வெயில் காரணமாகவும் ஆரணி, கொசஸ்தலை ஆறுகளின் தண்ணீரை சேமித்து வைக்கும் பூண்டி, பிச்சாட்டூர் அணைகள் முழுவதுமாக வற்றிவிட்டன. மேலும் இந்த இரு ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட சுருட்டபள்ளி, சிற்றபாக்கம் தடுப்பணைகளும் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால் நீர் பாயாத நிலை ஏற்பட்டு ஆற்றங்கரைகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டன. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கொசஸ்தலை ஆறு பாயும் பூண்டி அருகே உள்ள அரியத்தூர், ராஜபாளையம், ஆற்றம்பாக்கம், ஒதப்பை, நம்பாக்கம், மெய்யூர், மயிலாப்பூர், மோவூர், திருக்கண்டலம், அணைக் கட்டு, புன்னபாக்கம், செம்பேடு, ஆரணி ஆறு பாயும் போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், வடதில்லை, உப்பரபாளையம், மாம்பாக்கம், கலவை, ஆலப்பாக்கம், பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழாய்களில் சரியாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

போராட்டங்கள்

குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் பூண்டி மற்றும் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தி வரும் சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. இவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். சில பகுதிகளில் டேங்கர் லாரிகளை கொண்டு குடிநீர் வினியோகித்து வருகின்றனர்.

இருப்பினும் குடிநீர் தேவைகள் நிறைவேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். ஆறுகள் வறண்டுவிட்டதால் ஆடு, மாடுகள் கூட தண்ணீரின்றி அவதிப்படுகின்றன. மழை பெய்தால் மட்டும் இந்த நிலைமையில் இருந்து மீளமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story