மைசூருவில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை


மைசூருவில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை
x
தினத்தந்தி 27 April 2019 2:56 AM IST (Updated: 27 April 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது.

மைசூரு,

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் ஏற்பட்டது. இதன்காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விளை நிலங்களுக்கு தண்ணீர் இன்றி தவித்து வந்தனர்.

இந்த நிலையில் மாநிலத்தில் பெங்களூரு, குடகு, மைசூரு, சிக்கமகளூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது.

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மைசூருவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தக்காளியின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் மைசூருவில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனையானது. ஏராளமான தக்காளிகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் கோடை வெயிலால் தக்காளிகள் அழுகி வந்தன.

தற்போது தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அவ்வாறு வரும் தக்காளிகளை சேமித்து வைக்காமல் உடனடியாக விற்பனை செய்யும் பணியில் வியாபாரிகள் இறங்கி உள்ளனர். இதன்காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. மைசூருவில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள்மகிழ்ச்சி

தக்காளி விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏனெனில், மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே தக்காளி, கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளியை போல பீன்ஸ், கேரட், பீட்ரூட், வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட காய் கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளது.

Next Story