பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்கில் 6 பேர் கைது ரூ.65 லட்சம் தங்கநகை, பொருட்கள் மீட்பு


பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்கில் 6 பேர் கைது ரூ.65 லட்சம் தங்கநகை, பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 27 April 2019 4:15 AM IST (Updated: 27 April 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.65 லட்சம் தங்க நகைகள், பொருட்கள் மீட்கப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பரிகார பூஜை செய்வதாக...

பெங்களூரு வி.வி.புரம், சி.கே.அச்சுக்கட்டு, சுப்பிரமணியபுரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலருக்கு தோஷம் இருப்பதாகவும், அதனை பரிகார பூஜைகள் செய்து சரி செய்வதாகவும் கூறி ஒரு கும்பல் ஏமாற்றி வந்தனர். அதாவது தோஷம் இருப்பதால் உடல் நலக்குறைவு ஏற்படும், பிள்ளைகளால் சரியாக படிக்க முடியாது என்றும், பரிகார பூஜைகள் செய்தால் தோஷம் விலகி விடும் என்றும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர்.

பரிகார பூஜைக்காக வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து தங்க நகைகள், பணத்தை வாங்கி பூஜை செய்துவிட்டு, பின்னர் அவர்களது கவனத்தை திசை திருப்பி நகைகள், பணத்தை திருடி செல்வதை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொழிலாக வைத்திருந்தனர். இதுதொடர்பாக வி.வி.புரம், சி.கே.அச்சுக்கட்டு உள்ளிட்ட போலீஸ் நிைலயங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகி இருந்தது. அந்த கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

2 பேர் கைது

இந்த நிலையில், பொதுமக்களை ஏமாற்றி நகைகள், பணத்தை திருடி வந்ததாக ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த சேத்தன் சந்திரகாந்த் (வயது 37), ராேஜஷ் கணபதி (55) ஆகிய 2 பேரையும் வி.வி.புரம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் சேர்ந்து இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

கைதான 2 பேரிடமும் இருந்து 925 கிராம் தங்க நகைகள், பூஜை பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுரேஷ் தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

940 கிராம் நகைகள்

இதுபோல, கே.ஜி.நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நகரில் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கவிபுரம் குட்டஹள்ளியை சேர்ந்த அஜித்குமார்(20), கே.ஜி.நகரை சேர்ந்த ராஜு(23) ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.

மேலும் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்தும் அவர்கள் திருடி வந்தனர். இவர்கள் 2 பேரிடமும் இருந்து 940 கிராம் தங்க நகைகள், செல்போன்கள் மீட்கப்பட்டது. கைதான 2 பேரின் கூட்டாளிகளான மேலும் 3 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.65 லட்சம் மதிப்பு

அத்துடன், பெங்களூருவில் பூட்டி கிடக்கும் வீடுகளில் திருடி வந்த சிவராஜ்(27), அருண்(26) ஆகிய 2 பேரையும் கிரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் பகல் நேரத்தில் பூட்டி கிடக்கும் வீடுகளை காரில் சென்று நோட்டமிடுவார்கள். பின்னர் நள்ளிரவில் அந்த வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை 2 பேரும் திருடி வந்தனர். அவர்களிடம் இருந்து 91 கிராம் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி, எலெக்ட்ரானிக் பொருட்கள், ரூ.27 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 6 பேரிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை பார்வையிட்டார்

முன்னதாக கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள், தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை பார்வையிட்டார்.

பின்னர், அந்த நகைகளை அவற்றின் உரிமையாளர்களிடம் அண்ணாமலை வழங்கினார்.

Next Story