லஞ்சம் கேட்டதை ரகசியமாக படம் பிடித்ததால் வக்கீலை கடத்திய போலீஸ் அதிகாரி கைது


லஞ்சம் கேட்டதை ரகசியமாக படம் பிடித்ததால் வக்கீலை கடத்திய போலீஸ் அதிகாரி கைது
x
தினத்தந்தி 27 April 2019 3:05 AM IST (Updated: 27 April 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

லஞ்சம் கேட்டதை ரகசியமாக படம்பிடித்த வக்கீலை கடத்திய போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

சத்தாரா மாவட்டம் கண்டாலா போலீசில் 3 பேர் மோசடி புகார் ஒன்றை அளித்து இருந்தனர். அந்த புகாரில், ஒரு தம்பதி தங்களிடம் ரூ.1¼ கோடி வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தனர். இந்த புகாரை சத்தாரா மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு அபிஜீத் பாட்டீல் விசாரித்து உள்ளார்.

இதில், அவர் தனக்கு அதிகளவில் லஞ்சம் கொடுத்தால் மோசடி தம்பதியிடம் பணத்தை முழுமையாக வாங்கி தருவதாக புகார் அளித்தவர்களின் வக்கீல் ராஜ்குமார் சவானிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து வக்கீல் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

படம் பிடித்தார்

மேலும் சம்பவத்தன்று சட்டையில் ரகசிய கேமராவை பொருத்தி கொண்டு போலீஸ் அதிகாரியை சந்தித்து பேசினார். அப்போது போலீஸ் அதிகாரி இறுதியாக ரூ.1¾ லட்சம் தந்தால் மோசடி தம்பதியிடம் இருந்து பணத்தை வாங்கி தருவதாக வக்கீலிடம் உறுதி அளித்தார்.

மேலும் லஞ்சப்பணத்தை 15 நிமிடத்தில் தரவேண்டும் எனவும் கூறினார். இதை வக்கீல் தனது ரகசிய கேமராவில் படம்பிடித்தார். மேலும் லஞ்ச ஒழிப்புதுறைக்கும் தகவல் கொடுத்தார்.

கடத்தல்

இந்தநிலையில் வக்கீல், லஞ்ச ஒழிப்புதுறையினருடன் தொடர்பில் இருப்பதை போலீஸ் அதிகாரி மோப்பம் பிடித்தார். எனவே அவர் வக்கீலை தனது காரில் கடத்திச்சென்றார். சிறிது தூரம் சென்றதும் வக்கீலின் செல்போன், ரகசிய கேமராவை பறித்து கொண்டு அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு தப்பி சென்றார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் போலீஸ் அதிகாரி அபிஜீத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story