நாகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், வாய்மேடு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் தாக்கி 5 மாதங்கள் ஆகியும் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளாத நிலையில் தற்போது வங்கக்கடலில் ஒரு புதிய புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு “பானி“ என்று பெயரிடப்பட்டுள்ளது. பானி புயல், கஜா புயலை விட இரு மடங்கு வேகமாக இருக்கும் எனவும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்ட நிர்வாகம் அப்பகுதி மீனவர்களுக்கு புயல் முன்எச்சரிக்கை குறித்து எந்தவித அறிவிப்பும் வழங்கவில்லை என்று மாவட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புயல் எச்சரிக்கை அறிவிப்பு வழங்காததால் நாகை மாவட்டத்தில் இருந்து சுமார் 500 முதல் 600-க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று (நேற்று) கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்ப மீன்வளத்துறையினர் எந்தவித அறிவிப்பும் வழங்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள பானி புயல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக, நாகை துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளதால் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு வருமாறு படகு உரிமையாளர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story