தஞ்சை அருகே மரத்தில் கார் மோதல், கேபிள் டி.வி. ஆபரேட்டர் உள்பட 2 பேர் பலி
தஞ்சை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த திட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 52). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் வயலூர், ராமநாதபுரம் பகுதியில் கேபிள் டி.வி. இணைப்புகளை வீடுகளுக்கு வழங்கி மாதம்தோறும் அதற்கான பணத்தை வசூலித்து வந்தார். நேற்று காலை லோகநாதன் காரில் தஞ்சைக்கு வந்தார். அதே காரில் திட்டை புதுத்தெருவை சேர்ந்த சாந்தாவும்(49) பயணம் செய்தார்.
பின்னர் இருவரும் காரில் மீண்டும் திட்டையை நோக்கி சென்றனர். காரை லோகநாதன் ஓட்டினார். தஞ்சை-திட்டை சாலையில் கலெக்டர் பண்ணை என்ற இடத்தின் அருகே கார் சென்றபோது அந்த இடத்தில் சாலையை சீரமைப்பதற்கான ஆயத்த பணி நடைபெற்று இருந்ததை பார்த்து காரின் வேகத்தை குறைக்க லோகநாதன் முயற்சி செய்தார். ஆனால், அவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் சென்றவேகத்தில் சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது.
இதில் காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த லோகநாதன், சாந்தா ஆகிய இருவரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். விபத்து நடந்ததை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story