மாவட்டம் முழுவதும் அதிகரித்து வரும் நகை பறிப்பு சம்பவங்கள் - கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
மாவட்டம் முழுவதும் மோட்டார்சைக்கிள் கொள்ளையர்கள் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட போலீஸ் நிர்வாகம் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் மோட்டார்சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் கொள்ளையர்கள் நெல்லை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்து வந்துள்ளனர். மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் நடவடிக்கையால் இக்கொள்ளையர்களின் செயல்பாடுகள் மாவட்டத்தில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஆனால் தற்போது மோட்டார்சைக்கிள் கொள்ளையர்களின் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரே நாளில் விருதுநகரில் மட்டும் 2-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதேபோன்று சிவகாசியிலும் இரு சக்கர வாகனத்தில் சென்ற பட்டாசு தொழிலாளியிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் மட்டுமே நடைபெற்று வந்த கொள்ளை சம்பவங்கள் தற்போது கிராமங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்களை குறி வைத்து நகையை பறித்து செல்வது அதிகரித்து வருகிறது. ஆனாலும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப் படாத நிலையே நீடிக்கிறது.
மாவட்ட போலீஸ் நிர்வாகம் இக்கொள்ளை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள போதிலும் நடைமுறையில் கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்பட வில்லை. அதிகரித்தே வருகிறது. எனவே இக்கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை கண்காணிக்கவும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் பெண்கள் சாலையில் நடந்து செல்லக்கூட அச்சப்படும் நிலை ஏற்பட்டுவிடும்.
Related Tags :
Next Story