நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் உள்பட திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒரே நாளில் 10 பேர் வேட்புமனு தாக்கல்


நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் உள்பட திருப்பரங்குன்றம் தொகுதியில் ஒரே நாளில் 10 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 27 April 2019 4:30 AM IST (Updated: 27 April 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் உள்பட 10 பேர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் உள்பட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதி, விவசாயி போல தனது கைகளில் கரும்பு பிடித்தபடி கட்சி நிர்வாகிகளுடன் சென்று, திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு நலச்சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ‘தேர்தல் மன்னன்’ என அழைக்கப்படும் அவர், தேர்தலில் போட்டியிடுவது இது 202-வது முறையாகும்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “1988-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளேன். இந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தியுடன் போட்டியிட்டுள்ளேன். இதுவரை நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என 201 முறை போட்டியிட்டுள்ளேன். தற்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். இது எனக்கு 202-வது தேர்தல் ஆகும்” என்றார்.

மேலும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி சார்பில் வேணுகோபால கிருஷ்ணன், அம்மா மக்கள் நல இயக்கத்தை சேர்ந்த மணி, மறத்தமிழர் இளைஞர் சேனை கோபிநாத் மற்றும் முத்துக்குமார், செந்தில்குமார், நாகராஜ், அருள் என 10 பேர் நேற்று ஒரேநாளில் மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை மொத்தம் 18 பேர் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story