புயல் மீட்பு பணிக்கு தயார் நிலையில் போலீஸ் படை - மாவட்ட சூப்பிரண்டு தகவல்


புயல் மீட்பு பணிக்கு தயார் நிலையில் போலீஸ் படை - மாவட்ட சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 27 April 2019 4:15 AM IST (Updated: 27 April 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

புயல் மீட்பு பணிக்கு தேனி மாவட்டத்தில் போலீஸ் படை தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்தார்.

தேனி,

தமிழகத்தில் ‘கஜா’ புயலை போன்று ‘பானி’ புயலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் புயல் மீட்பு பணியில் ஈடுபட போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது. பேரிடர் மீட்பு பணிக்கென சிறப்பு பயிற்சி பெற்ற 22 போலீசார் மற்றும் 13 ஊர்க்காவல் படையினரை கொண்டு இந்த படை உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மீட்பு பணிகளுக்கான உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பார்வையிட்டார். பின்னர், மீட்பு படையினருக்கு பல்வேறு அறிவுரைகளை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

புயல் மீட்பு பணிக்கு போலீஸ் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மீட்பு பணிக்கு உதவும் வகையில், மரம் அறுக்கும் கருவி, விளக்குகள், அரிவாள், மண்வெட்டி, கயிறு, கடப்பாரை, டயர் டியூப் உள்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இதுபோன்ற மீட்பு பணிகளுக்கான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரும் போலீஸ் நிலையங்களில் புயல் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகளுடனும் தொடர்ந்து தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. பேரிடர் ஏற்படும் பட்சத்தில் இந்த துறைகளுடன் இணைந்து உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story