காகித தேவைக்கு கட்டுப்பாடு


காகித தேவைக்கு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 28 April 2019 10:30 AM IST (Updated: 27 April 2019 3:36 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் காடுகளின் பரப்பளவு 30 ஆண்டுகளில் 29 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வனங்கள் அழிக்கப்பட்டு பசுமை பரப்பளவு குறையும்போது வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிக்கிறது. அதன் தாக்கமாக பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்ற பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. காடுகளில் உள்ள மரங்களை அழித்து அதில் இருந்து காகிதங்கள், மரச்சாமான்கள், மரவேலைப்பாடுகளை கொண்ட அலங்கார பொருட்கள் செய்யப்படுகின்றன. காகித பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வினாத்தாள்களும், விடைத்தாள்களும் பெருமளவில் தேவைப்படுகின்றன.

காகித பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் மணிபால் பல்கலைக்கழகம் களம் இறங்கி உள்ளது. அங்கு ஆய்வகத்தில் நடத்தப்படும் தேர்வுக்கு பேப்பர்களுக்கு பதிலாக எலக்ட்ரானிக் பேடுகளை மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். பேப்பரில் எழுதுவது போலவே பேனா வடிவில் அந்த பேடில் மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். இதுபற்றி பல்கலைக்கழக துணை பதிவாளர் ஸ்ரீஜித் கோவிந்தன் கூறுகையில், ‘‘பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 36 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதனை 8 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள். ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 பக்கங்கள் அடங்கிய விடைத்தாளை வழங்குகிறோம். குறைந்தபட்சம் 57 லட்சத்து 60 ஆயிரம் தாள்கள் தேவைப்படும். இது மிகப்பெரிய காகித பயன்பாடாகும். தற்போது டிஜிட்டல் முறையில் தேர்வு நடத்த தொடங்கி இருப்பதால் காகிதத்தின் தேவை குறைந்துவிட்டது’’ என்கிறார்.

இதேபோல் பெங்களூருவில் உள்ள ரேவா பல்கலைக்கழகமும் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தொடங்கியுள்ளது.

Next Story