புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி– மொபட் மோதல்; விவசாயி பலி
புஞ்சைபுளியம்பட்டி அருகே லாரி–மொபட் மோதிக்கொண்ட விபத்தில் கோவிலுக்கு சென்ற விவசாயி பலியானார்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 68). விவசாயி. இவர் நேற்று பாட்சாமல்லனூரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு மொபட்டில் சென்றுகொண்டு இருந்தார்.
புங்கம்பள்ளி பஸ்நிறுத்தம் அருகே அவர் சென்றபோது எதிரே ஒரு லாரி வந்துகொண்டு இருந்தது.
கண்இமைக்கும் நேரத்தில் லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட நாராயணசாமி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் நாராயணசாமியை மீட்டு ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த நாராயணசாமிக்கு 2 மனைவிகள், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளார்.