சின்னசேலம் அருகே லாரி-கார் மோதல் சேலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி


சின்னசேலம் அருகே லாரி-கார் மோதல் சேலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 27 April 2019 10:30 PM GMT (Updated: 27 April 2019 7:05 PM GMT)

சின்னசேலம் அருகே லாரி-கார் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் சேலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

சின்னசேலம்,

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு ஊர் திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கொட்டச்சேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 45). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்காக இவர், திருப்பூரிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். இவருடன் கொட்டச்சேடு கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன்கள் அருண்குமார்(35), மகாலிங்கம்(32), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் தென்பாதியை சேர்ந்த கண்ணதாசன்(37), கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஆலத்தூர் கென்னிலாபுரத்தை சேர்ந்த சந்திரன் மகன் சதீஷ்(28), சிக்குன்சேரியை சேர்ந்த சந்திரன் மகன் கிருஷ்ணதாஸ்(37), சுனில்(37) ஆகியோர் தங்கி, அதே நிறுவனத்தில் ஊழியர்களாக பணிபுரிந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக பாலமுருகன் உள்பட 7 பேரும் ஒரு காரில் சென்னைக்கு சென்றனர். அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியை கண்டு ரசித்தனர்.

போட்டி முடிந்ததும் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு நள்ளிரவு 1 மணிக்கு 7 பேரும் அதே காரில் திருப்பூருக்கு புறப்பட்டனர். காரை பாலமுருகன் ஓட்டி வந்தார். இவர்களது கார், சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் என்ற இடத்தில் நேற்று காலை 6 மணி அளவில் வந்தது.

அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு லாரி வேகமாக சாலையில் ஏறியது. இதை சற்றும் எதிர்பார்க்காத பாலமுருகன், உடனடியாக பிரேக் பிடித்தார். இருப்பினும் கார், அந்த லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி உருக்குலைந்தது.

இந்த கோர விபத்தில் பாலமுருகன், அருண்குமார், சதீஷ் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மகாலிங்கம், கிருஷ்ணதாஸ், கண்ணதாசன், சுனில் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சின்னசேலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கிருஷ்ணதாஸ், கண்ணதாசன், சுனில் ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான காரை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மகாலிங்கம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான சின்னசேலம் அம்சாகுளத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ரமேஷ்(30) என்பவரை கைது செய்தனர்.

Next Story