ஓடும் ரெயிலில் கன்னியாஸ்திரியிடம் சில்மிஷம் டிக்கெட் பரிசோதகர் மீது புகார்


ஓடும் ரெயிலில் கன்னியாஸ்திரியிடம் சில்மிஷம் டிக்கெட் பரிசோதகர் மீது புகார்
x
தினத்தந்தி 28 April 2019 3:45 AM IST (Updated: 28 April 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் கன்னியாஸ்திரியிடம் டிக்கெட் பரிசோதகர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி,

மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வழியாக மைசூருக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சம்பவத்தன்று இரவு திருச்சிக்கு வந்து புறப்பட்டது. ரெயிலில் எஸ்.10 பெட்டியில் 30 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரி ஒருவர் உறவினர்களுடன் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு பயணம் செய்தார். ரெயிலானது, திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், கன்னியாஸ்திரி கழிப்பறை பக்கம் சென்றார். அப்போது, அவரிடம் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து இருக்கைக்கு வந்துள்ளார்.

அச்சத்தின் காரணமாக நடந்த சம்பவம் குறித்து உறவினர்கள் யாரிடமும் அவர் தெரிவிக்கவில்லை. ரெயில் பெங்களூரு சென்றடைந்ததும் நடந்த சம்பவம் குறித்து அங்கிருந்த ரெயில்வே அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட நபர் டிக்கெட் பரிசோதகர் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்த சம்பவம் குறித்து, திருச்சி ரெயில்வே அதிகாரிகள் சிலரிடம் அங்குள்ளவர்களும், அவரது குடும்பத்தினரும் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசாருக்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட நபர் யார்? என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் கேட்டபோது, “சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் அந்த ரெயிலில் பணியில் டிக்கெட் பரிசோதகராக இருந்ததாக தகவல் வந்தது. அவர் யார்? என தெரியவில்லை. அவர் உண்மையிலேயே டிக்கெட் பரிசோதகர் தானா? அல்லது வேறு நபரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணிக்கு செல்லும் போலீசாரை ரெயில் பெட்டிகள் முழுவதும் சென்று சோதனை நடத்தவும், கழிப்பறைகள் அருகே யாரேனும் சந்தேகப்படும்படி நின்றால் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர். 

Next Story