திருமண மண்டபத்தில் நூதன முறையில் காரில் நகை, செல்போன் திருட்டு
சென்னை திருமண மண்டபத்தில் நூதன முறையில் காரில் இருந்த நகை, செல்போன் திருட்டு போனது.
திரு.வி.க.நகர்,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் கவுதம்சந்த் (வயது 48). இவருடைய தங்கையின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் சென்னை பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கவுதம்சந்த் தனது காரில் திருமண மண்டபம் வந்தார். அந்த திருமண மண்டபத்தில் சில டிரைவர்கள் நின்றுகொண்டு இதுபோல் காரில் வருபவர்களிடம் சாவியை வாங்கி, கார்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதேபோல் அங்கு இருந்த மர்மநபர், காரை நிறுத்திவிடுவதாக கூறி கவுதம்சந்திடம் இருந்து கார் சாவியை வாங்கி சென்றார்.
சிறிதுநேரம் கழித்து கவுதம்சந்த் காரில் இருந்த நகையை எடுக்கச்சென்றார். அப்போது கார் கதவு திறந்து கிடந்தது. அதில் வைத்து இருந்த 8 பவுன் நகை, செல்போன், புது துணிகள் மற்றும் காரின் சாவி ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
காரை நிறுத்திவிடுவதாக கூறி சாவியை வாங்கிச்சென்ற மர்மநபர், காரில் இருந்த நகை, செல்போன், துணிகளுடன் காரின் சாவியையும் திருடிச்சென்று விட்டது தெரிந்தது.
இதுபற்றி பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story