4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: “தமிழக அரசின் சாதனைகளே அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும்” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி


4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: “தமிழக அரசின் சாதனைகளே அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும்” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 28 April 2019 3:30 AM IST (Updated: 28 April 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

“தமிழக அரசின் சாதனைகளே அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று மதியம் ஓட்டப்பிடாரம் வந்தார். அவருக்கு குறுக்குசாலையில் வேட்பாளர் மோகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் இந்த இயக்கத்தை மக்கள் போற்றும் இயக்கமாக வழிநடத்தி வருகிறார்கள். இந்த அரசு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கியது. அரசின் நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வருகின்ற காலம் இந்த காலம். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து அவற்றை நிறைவேற்றி வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களும், சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். மேலும் நடைபெற உள்ள ஓட்டப்பிடாரம் உள்பட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளே எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து கவர்னகிரியில் உள்ள வேட்பாளர் மோகன் வீட்டுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்றார். அதன்பின்னர் கவர்னகிரி, ஓட்டப்பிடாரம் பகுதியில் வேட்பாளர் மோகனை ஆதரித்து பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். இதில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், இணை செயலாளர் சண்முகதாய், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் ஆறுமுகபெருமாள், கிளை செயலாளர் பொன்முருகன், குமராண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story