இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் சோதனை
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
தூத்துக்குடி,
இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று மாலையில் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த மைசூரு எக்ஸ்பிரசில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. ரெயில் பெட்டிகள், பிளாட்பாரத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட பார்சல்களையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இந்த திடீர் சோதனையால் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குரும்பூர் அருகே நாலுமாவடியில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை அன்று நடைபெறும் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி நாலுமாவடியில் நேற்று நடந்த ஜெபக்கூட்டத்தில் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின்பேரில், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், போலீஸ் மோப்ப நாய் மூலமும் தீவிர சோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story