வாக்கு எந்திர அறைக்குள் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரம்: மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் வழக்கு


வாக்கு எந்திர அறைக்குள் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரம்: மதுரை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் வழக்கு
x
தினத்தந்தி 28 April 2019 4:30 AM IST (Updated: 28 April 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்துள்ளார்.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த வக்கீல் பசும்பொன்பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–

நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டேன். தேர்தல் முடிந்த பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை என மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தநிலையில் கடந்த 20–ந்தேதி, தாசில்தாராக பணியாற்றி வரும் சம்பூரணம் என்பவர் மற்றும் 3 பேருடன் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்துள்ளார். இந்த விவகாரம் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கோ, ஊடகங்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து அறிந்த பின்னர், மாவட்ட கலெக்டரை அணுகி கேட்டபோது தாசில்தார் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகில் இருந்த அறைக்கு சென்றதாக குறிப்பிட்டார். அது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது தாசில்தார் சம்பூரணம் அங்கு என்ன செய்தார்? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகில் இருக்கும் அறையும் சேர்த்து சீல் வைக்கப்பட்டதா? இல்லையா? தாசில்தார் சம்பூரணம் அந்தப் பகுதிக்குள் செல்ல அனுமதித்தது யார்? ஒருவேளை சீல் வைக்கப்பட்டு இருந்தால் தாசில்தார் சம்பூரணம் அதனை அகற்ற இயலுமா? அருகில் இருக்கும் அறைக்கு தாசில்தார் சம்பூரணம் சென்றார் என்றால் அந்த அறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்கு செல்ல கதவு உண்டா? என்பது குறித்த விவரங்கள் தற்போது வரை பதில் அளிக்கப்படாதவையாகவே உள்ளன.

இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் தாசில்தார் சம்பூரணம் மீது பணி இடைநீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தவிர வேறு எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த தேர்தலை ரத்து செய்து மதுரையில் மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story