ராமநாதபுரத்தில் அடகு வைத்த நகையை திரும்ப தரக்கோரி பெண்கள் சாலை மறியல்


ராமநாதபுரத்தில் அடகு வைத்த நகையை திரும்ப தரக்கோரி பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 April 2019 4:00 AM IST (Updated: 28 April 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனத்தில் அடகு வைத்த நகையை திரும்ப வழங்கக்கோரி ராமநாதபுரத்தில் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனம், தங்களிடம் அடகு வைக்கும் நகைகளுக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் என்றும், அதற்கு குறைந்த வட்டி வசூலிக்கப்படும் என்றும் விளம்பரம் செய்தனர். அதில் ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்தனர். குறுகிய காலத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கிளைகளை திறந்து அனைத்து பகுதிகளிலும் கடன் வழங்க தொடங்கினர். இந்த நிலையில் ஒரு சிலர் அடகு வைத்த நகையை மீண்டும் திருப்புவதற்காக சென்றபோது அவர்களுக்கு நகையை திரும்ப கொடுக்கவில்லையாம். இந்த தகவல் தெரிந்து அனைத்து கிளைகளிலும் அடகு வைத்தவர்கள் பணத்துடன் நகையை மீட்க சென்ற போது, அந்த நிறுவனத்தினர் கிளைகளை மூடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கோர்ட்டு மூலம் சமரச தீர்வு காணப்பட்டு ஏராளமானோரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நகைகள் திரும்ப வழங்கப்பட்டன.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் இவ்வாறு அடகு வைக்கப்பட்ட நகைகளை கோர்ட்டு மூலம் நேற்று திருப்பி வழங்கப்படுவதாக வாடிக்கையாளர்களுக்கு தகவல் தரப்பட்டது. இதை நம்பி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்களது நகைகளை மீட்க வாடிக்கையாளர்கள் திரண்டனர். அப்போது வாடிக்கையாளர்களுக்கும், தனியார் நிதி நிறுவன ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் தங்களது நகையை திரும்ப தரக்கோரி அரசு ஆஸ்பத்திரி சாலையில் நகர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story