பயங்கரவாதிகள் ஊடுருவலா? ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு தீவிர கண்காணிப்பில் பாம்பன் பாலங்கள்


பயங்கரவாதிகள் ஊடுருவலா? ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு தீவிர கண்காணிப்பில் பாம்பன் பாலங்கள்
x
தினத்தந்தி 28 April 2019 5:00 AM IST (Updated: 28 April 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். மேலும் பாம்பன் பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

ராமேசுவரம்,

இலங்கையில் கடந்த 21–ந்தேதி தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்ததில் ஏராளமானோர் பலியாகினர். 500–க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய நகரங்கள், ரெயில் நிலையங்கள், பாலங்கள் போன்றவற்றை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் 19 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் கர்நாடக காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் தமிழக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கண்காணித்து வருகிறார். ராமநாதபுரம் நகரம் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சந்தேகப்படும் வகையில் யாராவது நடமாடினால், அல்லது செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாம்பன் ரெயில் மற்றும் ரோடு பாலத்தில் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் ஏராளமான போலீசாரும், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களும், தீயணைப்பு படையினரும் குவிக்கப்பட்டு அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.

நேற்று முன்தினம் இரவில் தொடங்கி விடிய, விடிய பாம்பன் ரோடு பாலத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாலத்தின் வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்பட்டன.

இதேபோல பாம்பன் ரெயில் பாலத்திலும் ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ஜெகநாதன் தலைமையில் 20–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பாலம் முழுவதும் சோதனையிடப்பட்டது. பாலத்தின் இரு முனைகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ஜெகநாதன் கூறும்போது, ‘‘கடந்த 2 நாட்களாக ரெயில்வே பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து ராமநாதபுரம், ராமேசுவரம் உள்பட அனைத்து ரெயில் நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் சந்தேகப்படும்படியாக யாரையேனும் கண்டால் உடனடியாக ‘182’ என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். பாம்பன் பாலங்களை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

இதே போல் ராமேசுவரம் உள்ளிட்ட முக்கிய கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story