புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளை பாதுகாக்க 36 அவசர கண்காணிப்பு குழுக்கள் கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
பானி புயல் முன்எச்சரிக்கையாக மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க 36 அவசர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
இந்திய வானிலை மையத்தின் அறிவுரையின்படி தமிழகத்தில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்வதால், சூறைக்காற்றுடன் இடி, மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இயற்கை இடர்பாடுகளிடமிருந்து தங்களது கால்நடைகளை காத்திட ஏதுவாக பின்வரும் முன்எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி தங்களது கால்நடைகளை புயல், வெள்ளம், இடி மற்றும் மின்னல் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றிட தாழ்வான பகுதிகளிலிருந்து பாதுகாப்பான கட்டிடப்பகுதியில் கால்நடைகளை பாதுகாத்திட வேண்டும். மரங்களுக்கு கீழே கால்நடைகளை தஞ்சமடையவோ, கட்டிப்போடவோ கூடாது. மழைக்காலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கால்நடைகளை இடிதாங்கி பொருந்திய பாதுகாப்பான இடத்தில் இருக்க செய்வதன் மூலம் மின்னல் தாக்கத்திலிருந்து காப்பாற்றலாம்.
பாதுகாப்பான இடங்களில் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீர் போதுமான அளவு இருப்பில் வைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தலா 3 குழுக்கள் வீதம் 36 அவசர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி குழுக்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் கால்நடைகளை பாதுகாத்திட போதுமான உயிர்காக்கும் மருந்துகளும் மற்றும் தடுப்பு மருந்துகளும் போதிய அளவில் சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தையோ அல்லது ஒன்றிய அளவிலான அவசர கண்காணிப்பு குழுக்களை அணுகிடவும் தெரிவிக்கப்படுகிறது.
கால்நடைகளுக்கு உயிர்சேதம் ஏற்படுமாயின் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களையும், அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களையும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.