குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள்
குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தோ்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (திங்கட்கிழமை) கடைசிநாளாகும்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் சி.எஸ்.சிவள்ளி. இவர், கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த ஆண்டு(2018) நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சி.எஸ்.சிவள்ளி வெற்றி பெற்றிருந்தார்.
அதுபோல, கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த உமேஷ் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் கலபுரகி தொகுதியில் உமேஷ் ஜாதவ் போட்டியிட்டார். இதனால் குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகள் காலியாக இருந்தது. அந்த 2 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம்(மே) 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கடைசிநாள்
இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்த 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு, ஜனதாதளம்(எஸ்) ஆதரவு அளிக்கும் என்றும், அங்கு தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் என்றும் தேவே கவுடா மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளனர்.
குந்துகோல் மற்றும் சிஞ்சோலி தொகுதிகளுக்கு நாளையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுவதால், அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேணுகோபால் ஆலோசனை
இந்த நிலையில் 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் நேற்று மதியம் பெங்களூருவுக்கு வருகை தந்தார்.
பின்னர் அவர், வேட்பாளர்கள் தேர்வு குறித்து கர்நாடக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
வேட்பு மனு தாக்கல்
இதுபோன்று, பா.ஜனதா சார்பில் சிஞ்சோலி தொகுதியில் உமேஷ் ஜாதவின் மகன் அபினாஷ் ஜாதவ் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. குந்துகோல் தொகுதியில் பா.ஜனதா சார்பில், கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சிக்கனகவுடாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதுகுறித்து எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியலும் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. அதைதொடர்ந்து காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
Related Tags :
Next Story