தமிழகம்-கர்நாடகத்தின் உயிர்நாடியான கே.ஆர்.எஸ். அணையில் மதகுகள் பழுதுபார்க்கும் பணி தொடங்கியது


தமிழகம்-கர்நாடகத்தின் உயிர்நாடியான கே.ஆர்.எஸ். அணையில் மதகுகள் பழுதுபார்க்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 28 April 2019 3:52 AM IST (Updated: 28 April 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம்-கர்நாடகத்தின் உயிர்நாடியான கே.ஆர்.எஸ். அணையில் மதகுகள் பழுதுபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

மண்டியா,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கண்ணம்பாடி கிராமத்தில் கிருஷ்ணராஜசாகர் என்னும் கே.ஆர்.எஸ். அணை அமைந்துள்ளது. இந்த அணையின் கட்டுமான பணியை மறைந்த மைசூரு மன்னர் கிருஷ்ணராஜ உடையார் 1911-ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் போதிய பணம் இல்லாத காரணத்தால் இந்த பணி 1931-32-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நிறைவுப்பெற்றது.

இந்த அணையை கட்ட மன்னர் கிருஷ்ணராஜ உடையார், அவரது மனைவியின் தங்க ஆபரணங்களை விற்றதாக சொல்லப்படுகிறது. இத்தகைய பெயர் பெற்ற கே.ஆர்.எஸ். அணை தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகளின் பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் உயிர்நாடியாக விளங்குகிறது.

மதகுகள் பழுதுபார்க்கும் பணி

இந்த அணையில் மொத்தம் 173 மதகுகள் உள்ளன. இதில் அணையில் இருந்து கால்வாய்களுக்கு திறந்துவிடும் மதகுகள், அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவதற்கான மதகுகள் ஆகியவையும் அடங்கும். இதில் பெரும்பாலான மதகுகள் துருப்பிடித்த நிலையிலும், சேதமடைந்த நிலையிலும் இருந்தது.

இதனால் மதகுகளை பழுதுபார்க்க காவிரி நீர்வாரியம் முடிவு செய்தது. இதற்காக உலக வங்கியில் இருந்து நிதி உதவி பெறப்பட்டது. தற்போது கர்நாடகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துபோய்விட்டது. இதனால் அணையில் உள்ள நீர் இருப்பும் குறைவாக உள்ளது. இதைதொடர்ந்து அணையில் உள்ள மதகுகளை பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள காவிரி நீர்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இ்ன்னும் சில நாட்கள்...

அதன்படி மதகுகளை சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணியில் காவிரி நீர்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து காவிரி நீர்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், கே.ஆர்.எஸ். அணையில் உள்ள மதகுகளை பழுதுபார்க்கும் பணியை தொடங்கியுள்ளோம். கால்வாய் மதகுகள், விசை மதகுகள், தானியங்கி மதகுகள் ஆகியவற்றை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் மதகுகளில் சேதமடைந்த சில பாகங்களை மாற்றும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்துவிடும் என்றார்.

Next Story