உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்


உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 April 2019 4:05 AM IST (Updated: 28 April 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேனி,

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், ஒரு மாவட்ட ஊராட்சி, 8 ஊராட்சி ஒன்றியங்கள், 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன. அதற்கான வரைவு பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பான ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

அதுபோல், உள்ளாட்சி தேர்தலுக்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். அந்த பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக சமீபத்தில் தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வைத்து, உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் ஓரிரு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Next Story