எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்; பயணிகள் கடும் அவதி பராமரிப்பு பணிகளை இரவில் மேற்கொள்ள கோரிக்கை


எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்; பயணிகள் கடும் அவதி பராமரிப்பு பணிகளை இரவில் மேற்கொள்ள கோரிக்கை
x
தினத்தந்தி 29 April 2019 4:00 AM IST (Updated: 28 April 2019 9:39 PM IST)
t-max-icont-min-icon

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றத்தால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். எனவே இரவு நேரங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை,

பாதுகாப்பாகவும், மிக குறைந்த செலவிலும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய ரெயில் பயன்படுகிறது. ரெயில்வேயில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொடர் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட மேல்பாக்கம்-அரக்கோணம் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறும் என்று அறிவித்தது.

இந்த பராமரிப்பு பணி காரணமாக 4 மணி நேரம் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே கோவை, மங்களூரு, திருவனந்தபுரம், பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் இருந்து வரும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்டிரலில் இருந்து புறப்படாமல் காட்பாடி, ஜோலார்பேட்டை, சோளிங்கரில் இருந்து புறப்படும் எனவும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அரக்கோணம், வேலூர், ஜோலார்பேட்டை பகுதிகளில் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்த ரெயில்கள் ரத்து மற்றும் ரெயில் சேவை மாற்றம் குறித்து ரெயில்வே நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிட்டு இருந்தாலும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு இதுகுறித்து தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் சென்டிரலில் இருந்து புறப்பட முன்பதிவு செய்த பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

பயணிகள் சிலர் தாங்கள் முன்பதிவு செய்த ரெயில்கள் வேறு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதால் முன்கூட்டியே அந்தந்த ரெயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் சில பயணிகள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்த பின்னரே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலை தவற விட்டதை அறிந்து பெரிதும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

இதேபோல பல பகுதிகளில் இருந்து சென்னை சென்டிரல் வந்த ரெயில்களும் காட்பாடி, ஜோலார்பேட்டையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் சிரமப்பட்டனர். மேலும் சென்னை சென்டிரல் செல்வதற்கு புறநகர் ரெயில்களை பயன்படுத்தினர். இதனால் நேற்று காலை சென்டிரல் மூர்மார்க்கெட் முனையத்தில் பயணிகள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது.

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம் குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல முன்பதிவு செய்திருந்தேன். சரியான நேரத்தில் ரெயிலை பிடிக்க சென்டிரல் வந்தேன். ஆனால் இங்கு வந்தபின்னர் தான் ரெயில் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படுவது தெரியவந்தது. இதனால் எனது பயணம் ரத்தானது.

பஸ் மூலம் தான் ஊருக்கு செல்ல இயலும். இதனால் பெரும் பண செலவு ஏற்பட்டுள்ளது. ரெயில்வே நிர்வாகம் இரவு நேரங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பயணிகள் அதிக அளவில் வெளியூர் செல்லும் கோடை காலத்தில் இதுபோன்று ரெயில் சேவையில் மாற்றம் செய்வது மிகுந்த வேதனை தருகிறது ரெயில்வே நிர்வாகம் பயணிகள் சேவையை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணியில் ஈடுபடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவையிலும் நேற்று பராமரிப்பு பணி காரணமாக காலை 7.50 மணி முதல் மதியம் 2.10 வரை 38 பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

சில பயணிகள் ரெயில் நிலையம் வந்தபின்னரே பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Next Story