கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 29 April 2019 4:45 AM IST (Updated: 28 April 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்கின்றனர். கடும் வறட்சியின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை குறையத் தொடங்கியது.

இந்தநிலையில் சமீபத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,400 கனஅடியாக அதிகரித்தது. இதனிடையே மழை நின்றதால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கோடை விடுமுறையையொட்டி நேற்று சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர். அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பாாத்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக இருந்தது.

கோடை வெயில் கொளுத்தியதால் குளிர்பானங்கள், இளநீர் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாங்கி அருந்தினர். கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல் களை கட்ட தொடங்கி உள்ளது. கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆலாம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

Next Story