குழந்தைகள் விற்பனை வழக்கு: மேலும் 2 பெண் புரோக்கர்கள் கைது ஆம்புலன்ஸ் டிரைவர் பணி இடைநீக்கம்


குழந்தைகள் விற்பனை வழக்கு: மேலும் 2 பெண் புரோக்கர்கள் கைது ஆம்புலன்ஸ் டிரைவர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 29 April 2019 4:45 AM IST (Updated: 29 April 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் மேலும் 2 பெண் புரோக்கர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் கைதான ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வெளியானது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ள ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் ராசி புரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (வயது 50), அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர்களாக செயல்பட்ட ஈரோடு சூரம்பட்டி அருள்சாமி (47) மற்றும் ஈரோடு மாமரத்துபாளையம் ஹசீனா (26) ஆகிய 6 பேரை ஏற்கனவே கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ராசிபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லமுத்து, விஜயகுமார், இந்திரா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் குழந்தைகளை விற்பனை செய்ய புரோக்கர்களாக செயல்பட்டதாக ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரத்தை சேர்ந்த செல்வி (29), ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியை சேர்ந்த லீலா (36) ஆகிய இருவரை கைது செய்தனர்.

எனவே குழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்து உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்னும் சிலரிடம் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைகளை வாங்கும் பெற்றோர், எதிர்காலத்தில் அந்த குழந்தையின் உண்மையான பெற்றோர் சொத்துக்கு உரிமை கொண்டாட வாய்ப்பு இருப்பதால், விற்பனை செய்யும் பெற்றோரையும், வாங்கும் நபர்களையும் தெரியவிடாமல் புரோக்கர்கள் இருதரப்பிலும் ஒரு கணிசமான தொகையை வாங்கி கொண்டு, குழந்தைகளை விற்பனை செய்து இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கில் கைதான நபர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகளை விற்பனை செய்த மற்றும் வாங்கிய பெற்றோரை அடையாளம் காணும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். வெளி மாவட்டங்களுக்கும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யவும் நாமக்கல் மாவட்ட போலீசார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் சிக்கி கைதான கொல்லிமலை பவர்காடு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தனர். போலீசாரின் பரிந்துரையை ஏற்று ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசனை பணி இடைநீக்கம் செய்து நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் குமார் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரனும் ஏற்கனவே பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story