சேலத்தில் 2 இடங்களில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
சேலத்தில் 2 இடங்களில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் நெத்திமேடு ஆண்டி கவுண்டர் காலனியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த கிஷோர், கவுதம், மகேஷ்குமார், குணசேகரன், பாஸ்கரன் ஆகியோர் ஒரே வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டிற்குள் இருசக்கர வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் வீட்டின் முன்பு இருக்கும் செட்டில் நிறுத்தி வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திடீரென இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். தீ இருசக்கர வாகனங்களில் பிடித்து மள மளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதைப் பார்த்ததும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அங்கு வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் இருசக்கர வாகனங்களில் தீ முழுவதுமாக பற்றி எரிந்தது. இதனால் இரு சக்கர வாகனங்கள் எலும்புக்கூடு போன்று காட்சி அளித்தன.
கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எஸ்.கே. நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டின் முன்பு ஆனந்தன் என்பவர் தனது 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த இளமுருகன் என்பவரும் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தியிருந்தார். இந்த 3 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இதிலும் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story