தர்மபுரி வாக்கு எண்ணும் மையத்தில் மதுபோதையில் இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் நடவடிக்கை
தர்மபுரி வாக்கு எண்ணும் மையத்தில் மதுபோதையில் இருந்த போலீஸ் ஏட்டை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் நடவடிக்கை மேற்கொண்டார்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தர்மபுரி அருகே செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பாதுகாப்பு பணியில் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் முருகேசன் (வயது 35) என்பவர் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் ஏட்டு முருகேசன், வாக்கு எண்ணும் மையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறியதாகவும், இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடன் பணியாற்றிய போலீசார் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தம்மாள் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது முருகேசன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சாந்தம்மாள் விசாரணை அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜனிடம் தாக்கல் செய்தார். வாக்கு எண்ணும் மையத்தில் மது போதையில் பணியாற்றியதாக போலீஸ் ஏட்டு முருகேசனை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மது போதையில் இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story