உடுமலை அருகே பி.ஏ.பி.கால்வாயில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள் கண்காணித்து தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


உடுமலை அருகே பி.ஏ.பி.கால்வாயில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள் கண்காணித்து தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 April 2019 4:15 AM IST (Updated: 29 April 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே பி.ஏ.பி. கால்வாயில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளிக்கிறார்கள். இதை அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிபட்டி,

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் மாணவர்களுக்கு பொழுதை போக்குவது சிரமமான வி‌ஷயமாக உள்ளது. அதே நேரத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் விளையாட்டு மையங்களில் விளையாடுவது மிகவும் கடினமானதாகவும், களைப்படைய வைப்பதாகவும் உள்ளது. இந்த நிலையில் சிறுவர்களுக்கு உற்சாகத்தையும், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வழியையும் ஒருசேர தருவதாக பி.ஏ.பி. கால்வாயை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் சிறுவர்கள் விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்துள்ள கால்வாயும் விளையாடும் முறையும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

தற்போது திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் பள்ளபாளையம், குரல்குட்டைபோன்ற பல ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களை ஒட்டியும், உடுமலை நகராட்சி பகுதி குடியிருப்புகளை ஒட்டியும் செல்கிறது. இந்த கால்வாயில் குளிக்கவோ, துணி துவைக்கவோ தடை உள்ளது. ஆனால் அதனை யாரும் பொருட்படுத்துவது இல்லை.

கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் கால்வாயில் குளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமானவர்கள் துணி துவைக்கவும், வாகனங்களை கழுவவும் பலர் கால்வாய் நீரை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் கால்வாயில் விளையாட்டு மைதானம் போல் பயன்படுத்தி வருகின்றனர். கால்வாயின் குறுக்கே செல்லும் குழாய்களின் மீது ஏறி மறுபுறம் கடந்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும்பொழுது தவறி கால்வாய் நீருக்குள் விழும் சிறுவர்கள் பிடித்துக்கொள்ள குழாயின் மீது நீளமான கயிற்றை கட்டி வைத்துள்ளனர். அந்த கயிற்றை பிடிக்க தவறும் சிறுவர்களை மற்ற சிறுவர்கள் சேர்ந்து நீளமான துண்டைப்போட்டு கரையேற்றுகின்றனர். இதில் பெரும்பாலான சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாது.

இதேபோல் கால்வாயின் கரைகளில் பெரிய கற்களை குவித்து வைத்து அதன்மீது கால்வாயின் குறுக்கே கயிறு கட்டி அதைப்பிடித்து கொண்டு சிலர் குளிக்கின்றனர். மேலும் சிறு குழந்தைகளை தோளில் தூக்கிக்கொண்டு குளிக்கும் பெற்றோர், அந்தரத்தில் தாவி கால்வாயில் குதிக்கும் இளைஞர்கள் என பலவிதமான ஆபத்தான குளியல்களை ஆங்காங்கே காணமுடிகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பி.ஏ.பி. கால்வாயில் ஆபத்தான குளியலில் ஈடுபடுபவர்களை அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story