பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பனியன் நிறுவன தொழிலாளி பலியானார். பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பல்லடம்,
பல்லடம் அருகே உள்ள மொசுவம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் அர்ஜூன் (வயது 39). இவருடைய மனைவி மகாலட்சுமி என்கிற ரேவதி (33). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர். அர்ஜூன் மற்றும் மகாலட்சுமி ஆகிய 2 பேரும் டி.கே.டி.மில் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்–மனைவி இருவரும் வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை அர்ஜூன் ஓட்டினார். பின் இருக்கையில் அவருடைய மனைவி அமர்ந்து இருந்தார். இவர்களுடைய மோட்டார் சைக்கிள் பல்லடம் அருகே தாராபுரம் சாலையில் திரும்பி பனப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கிஷோர்குமார் (25) மற்றும் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் (24) ஆகிய 2 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
இண் இமைக்கும் நேரத்தில் அர்ஜூன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது கிஷோர்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் பயணம் செய்த 4 பேரும் கீழே விழுந்த பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அர்ஜூனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 3 பேருக்கும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.