பல மாதங்களாக நீடிக்கும் மின் மீட்டர் தட்டுப்பாடு வைப்புத்தொகை செலுத்தி காத்திருக்கும் பொதுமக்கள்


பல மாதங்களாக நீடிக்கும் மின் மீட்டர் தட்டுப்பாடு வைப்புத்தொகை செலுத்தி காத்திருக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 April 2019 4:30 AM IST (Updated: 29 April 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் மீட்டர் சப்ளை இல்லாததால் புதிய மின் இணைப்புக்கோரி வைப்புத்தொகை செலுத்தி காத்திருக்கும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்,

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் மின்சாரமும் முக்கிய இடம் பிடித்துள்ளது. சிறிது நேரம் கூட மின்சாரம் இல்லாமல் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்த சுட்டெரிக்கும் கோடை வெயிலில் மின்சாரம் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான். அந்தளவிற்கு மின்சாரம் முக்கியமான நிலையில் தற்போது மின்சார பயன்பாடு அதிகரித்து வருவதாலும், மின்சார உபகரணங்களின் தேவை அதிகரித்து வருவதாலும் இவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இந்த தேவையை நிறைவு செய்ய என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சார மீட்டர் தட்டுப்பாடு தீர்க்கப்படாத குறையாகவே உள்ளது. கடந்த பல மாதங்களாக புதிய மின் இணைப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை. மின் மீட்டர் சப்ளை இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலுக்கு பின்னர் ஏற்பட்ட இந்த மின்சார மீட்டர் தட்டுப்பாடு அதன்பின்னர் முழுமையாக தீர்க்கப்படாததால் இதுநாள்வரை நீடித்து வருகிறது.

கடந்த 2012–ம் ஆண்டுக்கு பின்னர் புதிய மின்சார எலக்ட்ரானிக் மீட்டர் முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் பழைய மீட்டர்களை மின்சார வாரியமே மாற்றி புதிய எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தியது. இந்த எலக்ட்ரானிக் மீட்டர் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது மாநிலம் முழுவதுமே சப்ளை இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த காலங்களில் தனியார் மின் மீட்டரை வாங்கி பொருத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் தனியார் மின் மீட்டரை ஆய்வு செய்து உரிய விதிகளின்படி சரியாக உள்ளது என்று சான்றளித்த பின்னர் தனியார் மின்மீட்டரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று இருந்தது.

அந்த நடைமுறையை முறையாக அமல்படுத்தினால்கூட தற்போதையை மின் மீட்டர் தட்டுப்பாட்டினை சரிசெய்யலாம். ஒட்டுமொத்தமாக மின்மீட்டர் தட்டுப்பாடு ஏற்படக்காரணம் கடந்த பல மாதங்களாக சப்ளை இல்லாததே என்று ஒரு சில மின்வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக பணம் கட்டி மின் இணைப்பு கேட்டு பல மாதங்களாக காத்திருக்கும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். அனைவருக்கும் உடனடி மின் இணைப்பு என்ற கொள்கையுடன் செயல்படுவதாக கூறிவரும் நிலையில் மின்மீட்டர் சப்ளை இல்லாமல் இருப்பதால் மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் மீட்டர் ஒதுக்கீடு கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் வந்துவிடும். பதிவு செய்து காத்திருக்கும் முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதே பதிலைத்தான் கடந்த பல மாதங்களாக மின் இணைப்பு வேண்டி காத்திருப்பவர்களுக்கு மின் வாரியத்தினர் தெரிவிப்பதால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். மாநில அளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த மின் மீட்டர் தட்டுப்பாட்டினை உடனடியாக போக்கி அக்னி நட்சத்திர வெயிலுக்கு முன்னதாக மின் இணைப்பு வழங்கி மக்களின் மனதை குளிர செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story