குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நாமக்கல்லில் நல்லக்கண்ணு பேட்டி


குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நாமக்கல்லில் நல்லக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 29 April 2019 4:00 AM IST (Updated: 29 April 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நாமக்கல்லில் கூறினார்.

நாமக்கல், 

ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் 20-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நாமக்கல்லில் நடந்தது. விழாவுக்கு சங்கத்தின் மாநில தலைவர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில பிரசார செயலாளர் அய்யணபிள்ளை வரவேற்று பேசினார். இதில் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அரசு பணியில் உள்ளவர்கள் மட்டும் இன்றி ஓய்வு பெற்றவர்களும் உரிமைக்காக போராட வேண்டும் என்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது :- தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடக்கும். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் இருந்தே தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பை கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு ஆகும்.

பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடக்க அனுமதிக்க கூடாது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். புலனாய்வு குழு மூலம் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். மதுரை சம்பவம் தேர்தல் ஆணையத்தின் தவறான கொள்கை மற்றும் அணுகுமுறையை காண்பிக்கிறது. தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு துணையாக இருப்பதை எடுத்து காட்டுகிறது. மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதுவரை வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் செல்வராஜ், சங்கத்தின் பொதுச்செயலாளர் மோகன், மாவட்ட தலைவர் கருப்பன், செயலாளர் வீரபத்திரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் மாதவன் நன்றி கூறினார்.

Next Story