‘லக்கி ஷூ’ என்பதால் விரும்பி அணிந்திருந்தேன் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம் குறித்து வீராங்கனை கோமதி கருத்து


‘லக்கி ஷூ’ என்பதால் விரும்பி அணிந்திருந்தேன் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம் குறித்து வீராங்கனை கோமதி கருத்து
x
தினத்தந்தி 29 April 2019 5:00 AM IST (Updated: 29 April 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி அணிந்திருந்த ‘ஷூ ’பற்றி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் படம் குறித்து அவர் கூறுகையில், ‘லக்கி ஷூ’ என்பதால் தான் விரும்பி அணிந்திருந்தேன் என நிருபர்களிடம் தெரிவித்தார்.

திருச்சி,

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கோமதியின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமம் ஆகும். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பல சோதனைகளை கடந்து ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் தங்கம் வென்ற கோமதி நேற்று சொந்த ஊர் திரும்பினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை திருச்சி வந்த அவரை கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து, பாராட்டி, மேலும் பல சாதனைகளை படைக்குமாறு வாழ்த்தினார்.

விமான நிலையத்தில் கோமதியை வரவேற்பதற்காக அவரது குடும்பத்தினரும், பொதுமக்களும், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், தன்னார்வல அமைப்புகளும், அவர் ஏற்கனவே படித்த ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகளும், நிர்வாகத்தினரும் விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வெளியே வரும் நுழைவுவாயில் அருகே திரண்டிருந்தனர்.

கோமதி, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை பார்த்து பொதுமக்கள் கையசைத்தனர். அப்போது தங்க மங்கை, தங்கத்தாரகை என வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். பலர் அவருக்கு பூங்கொத்து, சால்வைகள் கொடுத்து வாழ்த்தினர். அதன்பின் அவர் தனது கிராமத்திற்கு மற்றவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது சகோதரர் சுப்ரமணி மற்றும் சகோதரிகள், உறவினர்கள் சென்றனர்.

முன்னதாக விமான நிலையத்தில் கோமதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தடகள போட்டியில் பங்கேற்றபோது, கிழிந்த ஷூ அணிந்து பங்கேற்றது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் படத்துடன் வைரலாக பரவி வரும் கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “நான் சிறிது கிழிந்த ஷூ தான் அணிந்திருந்தேன். அந்த ஷூ எனக்கு லக்கி ஷூ. அதனால் நான் அதனை விரும்பி அணிந்திருந்தேன். 2 ஷூக்களின் நிறம் மாறி இருப்பது டிசைன் தான். வேறொன்றுமில்லை. சமூக வலைத்தளங்களில் அந்த படத்தை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்கள்” என்றார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், “திருச்சியில் பிறந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. போட்டியில் வென்ற என்னை இவ்வளவு பேர் வரவேற்க வந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அடுத்த இலக்கு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்வதே ஆகும். என்னை இதற்கு முன்பு பலருக்கு தெரியாது. அதனால், யாரும் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை. தற்போது என்னை எல்லோருக்கும் தெரிகிறது. அதனால் நிறைய பேர் ஸ்பான்சர் செய்ய முன்வருகிறார்கள். அரசும் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் எனக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளது. என் சொந்த கிராம மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். கிராமத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஏழ்மை நிலையில் இருந்தாலும் நன்றாக பயிற்சி பெறுங்கள். அரசு உதவி செய்யும். அரசின் உதவிகளை பெற்று பயன் அடையுங்கள்” என்றார்.

வீராங்கனை கோமதிக்கு சொந்த ஊரின் அருகே ஆலம்பட்டி ரோட்டில் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேள, தாளங்கள் முழங்க பொதுமக்கள் அவரை வரவேற்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கோமதி பேசுகையில், “நான் இந்த இடத்தில் நடந்து செல்லும்போது எனது தந்தையின் நண்பர்கள் பலர் எனக்கு உதவி செய்துள்ளனர். பஸ்சுக்காக நான் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை காத்திருப்பேன். அப்போது ஆட்டோ டிரைவர்கள் என்னை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார்கள். இவ்வளவு பேர் திரண்டு வந்து என்னை வரவேற்றதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் எப்போதுமே இந்த இடத்தில் நிற்கும் போது என்னுடன் தந்தையும் நிற்பார். ஆனால் இன்று அவர் இல்லாதது எனக்கு வருத்தமாக உள்ளது” என பேசிக்கொண்டிருந்த போது, அவர் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் பலர் நாங்கள் உனக்கு தந்தையைபோல் இருக்கிறோம் என சத்தமாக கூறினர்.

தொடர்ந்து அவர் பேசுகையில், முடிகண்டம் கிராமத்திற்கு தேவையான பஸ் வசதி, ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர முதல்-அமைச்சரை சந்திக்கும் போது தெரிவிப்பதாகவும், கிராமத்தை சேர்ந்தவர்கள் எந்த உதவி வேண்டுமானாலும் தன்னிடம் கேட்கும்படியும், வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து அவருக்கு இந்திரா கணேசன் கல்லூரி குழுமத்தினர், தி.மு.க.வினர், நாம் தமிழர் கட்சியினர் உள்பட அரசியல் கட்சியினரும், பொதுமக்கள் பலரும் சால்வை மற்றும் பூங்கொத்து மற்றும் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்றும் வாழ்த்துகளை பெற்றார். சொந்த ஊரான முடிகண்டத்திலும், சுற்று வட்டார கிராமங்களிலும் அவரை வரவேற்று ஆங்காங்கே வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Next Story