வீரகாரன் சாமி கோவில் திருவிழாவையொட்டி 63 மாடுகள் பூ தாண்டும் நிகழ்ச்சி


வீரகாரன் சாமி கோவில் திருவிழாவையொட்டி 63 மாடுகள் பூ தாண்டும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 28 April 2019 10:45 PM GMT (Updated: 28 April 2019 7:33 PM GMT)

மோகனூர் அருகே வீரகாரன் சாமி கோவில் திருவிழாவையொட்டி 63 மாடுகள் பூ தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மோகனூர், 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே எஸ்.வாழவந்தி ஊராட்சி மேலப்பட்டியில் பிரசித்தி பெற்ற வீரகாரன் சாமி கோவில் உள்ளது, இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கம்பம் ஊன்றி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு சாமி அழைப்பு ஊர்வலம், எண்ணெய் காப்பு பூஜை, சாமி அலங்காரம் மற்றும் வாணவேடிக்கை நடைபெற்றது. நேற்று அதிகாலை 2 மணிக்கு செங்கரும்பு பந்தல் அமைத்து, திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை, மகா தீபாராதனை, மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு மேல் பச்சை மூங்கில் தோரணம் நடுதலும் மாலை 3 மணிக்கு சாமி மாடு அழைத்தல், பட்டியில் அலங்கார பூஜையும் நடைபெற்று.

பின்னர் மாலை 4 மணிக்கு சாமி மாடுகள் பூ தாண்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாமக்கல், சேலம், திருச்சி, கரூர் மாவட்டங்களில் இருந்து 63 மாடுகள் அழைத்து வரப்பட்டன. மேலும் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் 3 முறை மாடுகள் ஓட விடப்பட்டன. அதில், 3-வது முறை எஸ்.வாழவந்தி மேலப்பட்டி சாமி மாடு முதலாவதாக வந்து வெற்றி பெற்றது.

தொடர்ந்து அந்த ஊர் பட்டக்காருக்கு மரியாதை செய்து குதிரையில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பட்டக்காரர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் குடிப்பாட்டுகாரர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Next Story