முதுமலையில், யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்
முதுமலையில் யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி மற்றும் யானை சவாரி செய்து, இயற்கை எழில் காட்சிகள் மற்றும் வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.
முதுமலையில் கும்கி யானைகள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் சவாரி நடத்தப்படுகிறது. தற்போது யானை சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதுமலையில் ஆரம்பத்தில் 2 கும்கி யானைகள் மூலம் யானை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால் யானை சவாரி செய்ய வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கால தாமதத்தால் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக முதல் முறையாக 6 கும்கி யானைகள் மூலம் சவாரி நடத்த புலிகள் காப்பக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக சங்கர், உதயன், விஜய், இந்தர், சுமங்கலா, பொம்மன் ஆகிய யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கபட்டது.
பயிற்சி முடிந்ததை அடுத்து கடந்த ஒரு வார காலமாக யானை சவாரி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 24 முறை யானை சவாரி நடத்தப்படுகிறது. கூடுதல் யானைகளை கொண்டு சவாரி நடத்தப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து தெப்பக்காடு முன்பதிவு மைய வனச்சரகர் விஜய் கூறும்போது, முதுமலையில் இதுவரை 2 யானைகள் மூலம் காலை 2 முறை மாலை 2 முறை என 4 முறை சவாரி நடத்தப்பட்டு வந்தது. இதனால் யானை சவாரி செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் கால தாமதம் காரணமாக ஏமாற்றம் அடையும் நிலை இருந்தது.
ஆனால் தற்போது 6 யானைகள் மூலம் சவாரி அனுப்புகிறோம். இதற்கு சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதற்காக ரூ.1,120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றார்.
Related Tags :
Next Story