அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் ஒப்படைக்கும் முடிவு கைவிடப்பட வேண்டும் - மாணவர் சங்க மாநில செயலாளர் பேட்டி
அரசு பள்ளிகளை தனியாரிடமோ, தொண்டு நிறுவனங்களிடமோ ஒப்படைக்கும் முடிவை பள்ளி,கல்வித்துறை கைவிடவேண்டும் என இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் வலியுறுத்தி உள்ளார்.
விருதுநகர்,
விருதுநகரில் இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளில் ஏழைஎளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை அதிகாரிகள் முறையாக கண்காணித்து உறுதி செய்யவேண்டும்.மத்திய அரசு இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை ரூ.1,400 கோடி வரை வழங்கப்படாமல் உள்ளது. இந்த கல்வி உதவித்தொகையை உடனடியாக பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக அரசு, அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ.28 ஆயிரம் கோடி செய்யப்பட்ட நிலையில் அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு பள்ளி,கல்வித்துறை மூலமே நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை, கோவை,சிதம்பரம், நெல்லை ஆகிய ஊர்களில் இருந்து மே மாதம் 25–ந்தேதி முதல் 4 நாட்கள் சைக்கிள் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கவேண்டும். சோதனை என்ற பெயரில் மாணவிகளிடம் கெடுபிடி காட்டாமல் முறையாக அவர்களிடம் சோதனை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.