விருதுநகரில் குடியிருப்பு பகுதியில் பாம்புகள் படையெடுப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விருதுநகரில் குடியிருப்பு பகுதியில் பாம்புகள் படையெடுப்பால் அப்பகுதியினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் 18–வது வார்டில் குடியிருப்பு பகுதியில் நீர்மாலைசந்து என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள கழிப்பறை பயன்பாடு இல்லாமல் நீண்ட காலமாக உள்ளது. மேலும் அங்குள்ள கழிப்பறை தொட்டியும் திறந்த நிலையிலேயே சுகாதார கேட்டை ஏற்படுத்தி வரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி நீர்மாலை சந்தில் உள்ள கழிப்பறை மற்றும் கழிப்பறை தொட்டியினை அகற்றவும், பாம்புகளை அப்பகுதியில் இருந்து பிடித்து அகற்றவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீர்மாலை சந்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டால் அந்த சந்து பாம்புகளின் புகலிடமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்காது. எனவே இப்பிரச்சினையில் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.