வேதாரண்யம் கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரம்


வேதாரண்யம் கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 29 April 2019 4:30 AM IST (Updated: 29 April 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொதுமக்களிடம் பிடிபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம்,

இலங்கையில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் யாரேனும் ஊடுருவி இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியில் கடலோர காவல் குழுமத்தை சேர்ந்த போலீசார், சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார், ‘கியூ’ பிரிவு போலீசார் மற்றும் மத்திய உளவு பிரிவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, பெரியகுத்தகை, கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கண்காணிப்பு பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

இதில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வேதாரண்யம் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான், வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோடியக்கரை, ராமர்பாதம், தேத்தாகுடி, அண்டர்காடு, புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் கடற்கரையையொட்டி உள்ள 13 சோதனை சாவடிகளில் வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வேதாரண்யம் அருகே விழுந்தமாவடி தென்பாதி சோதனை சாவடி பகுதியில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடி கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவர் ஏன் தென்பாதி பகுதிக்கு வந்தார்? என்பது பற்றி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் பொதுமக்களிடம் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story